மாணவிகளிடம் சில்மிஷம் புகார்: பேராசிரியரை பணியிடநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
மாணவிகளை சில்மிஷம் செய்ததாக புகாரில் சிக்கிய பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி உயர்கல்வி இயக்குனர் அலுவலகத்தை மாணவ–மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர். அப்போது கல்லூரி முதல்வர், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பேராசிரியரை வேறு கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவிகளிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே அந்த பேராசிரியர் இதுபோன்ற புகாரின் அடிப்படையில் தான் இந்த கல்லூரிக்கு மாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிந்த மாணவ–மாணவிகள் அந்த பேராசிரியரை கல்லூரியில் இருந்து பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வி தொழில்நுட்பத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பேராசிரியரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்த லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.