அ.தி.மு.க.–என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை விரைவில் முடியும் அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் முடியும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக எம்.பி. தேர்தல் தொடர்பான கூட்டணியில் தொகுதி உடன்பாட்டினை முடிவு செய்த அறிவித்த கட்சி அ.தி.மு.க. மட்டும்தான். தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தோல்வி பெறும்.
இதற்கு மக்கள் மனநிலைதான் காரணம். ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்காக எதையும் செய்யவில்லை. புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கவில்லை. இதுதொடர்பாக முதல்–அமைச்சருடன் தனிமேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன்.
கவர்னர் மாளிகை முன்பு முதல்–அமைச்சர் தர்ணா போராட்டம் நடத்தியது எதற்காக? அவர் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதா? கடந்த சட்டமன்ற தேர்தலில் 36 சதவீத வாக்குகள்தான் பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மீதமுள்ள மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராகத்தான் உள்ளனர்.
தர்ணா போராட்டம் நடத்திய முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகைக்குள் சென்று அவருடன் என்ன பேசினார்கள். எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் மத்தியில் தெளிவாக வெளியிட வேண்டும். கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று நாங்களும்தான் வலியுறுத்தி வந்தோம். இதுதொடர்பாக சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்காதது ஏன்? கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக சட்டசபையை கூட்டி முதல்–அமைச்சர் தெரிவிக்கவேண்டும்.
மத்திய அரசு புதுவையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தவில்லை. மத்திய அரசு செயல்படுத்தும் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் நிதியை மாநில அரசுதான் கேட்டுப்பெற வேண்டும்.
கவர்னருக்கு எதிராக அரசு சார்பில் நடத்த வேண்டிய போராட்டத்தை அரசியல் சார்பாக மாற்றி முதல்–அமைச்சர் கொச்சைப்படுத்திவிட்டார். கவர்னர் அரசு விழாவில் என்னை அவமானப்படுத்தினார். இதுதொடர்பாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தேன். ஆனால் அதை உரிமைக்குழுவுக்குக்கூட அனுப்பவில்லை. அநாகரீகத்தின் உச்சகட்டமாக கவர்னர் முதல்–அமைச்சரை விமர்சிக்கிறார்.
புதுவையில் அ.தி.மு.க. கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்கும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.