மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதல்–அமைச்சர்களை சந்திக்க பிரதமர் மறுக்கிறார் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் பேட்டி
மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மாநில முதல்–அமைச்சர்களை சந்திக்க பிரதமர் மோடி மறுக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறினார்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக புதுவை காங்கிரஸ் கட்சியில் பிரசார குழு, விளம்பர குழு, ஊடக குழு உள்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை 100 அடி ரோட்டில் உள்ள சன்வே ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் நமச்சிவாயம், புதுவை மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரசார குழு, விளம்பர குழு, ஊடக குழு நிர்வாகிகளிடம் தனித்தனியே ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் எவ்வாறு ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் புதுவை மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை மராட்டியத்தில் சிவசேனா கட்சி பா.ஜ.க.வை கடுமையாக வசைபாடியது. அமித்ஷா, மோடியை தனிப்பட்ட முறையில் கூட விமர்சனம் செய்தது. ஆனால், சி.பி.ஐ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் உதவியுடன் பயம் காட்டியும், வர்த்தக உடன்பாடு செய்தும் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
அதேபோல தான் தமிழகத்திலும் அ.தி.மு.க., பா.ம.க.வை பா.ஜ.க. மிரட்டி கூட்டணி வைத்துள்ளனர். இது கொள்கைக்கான கூட்டணி இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி பயம், வர்த்தகத்தால் உருவான கூட்டணி.
அதேநேரத்தில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி மக்கள் நலனுக்கான, கொள்கைக்கான கூட்டணி. தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி காலத்தில் இருந்தே காங்கிரஸ், தி.மு.க. உறவு நீடித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் மக்கள் நலனுக்காக செயல்படும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். புதுவையை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடையும் வகையில் கூட்டணி உடன்பாடு இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்–அமைச்சர்கள் சந்தித்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க பிரதமர் மோடி மறுக்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு பல முறை தமிழகம் வரும் மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது வந்தாரா?
காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு உளவுத்துறையின் கவனக்குறைவு தான் காரணம். இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள் கூட நாட்டை உதாசீனப்படுத்தக்கூடிய அளவுக்கு மோடி ஆட்சியில் மோசமான வெளியுறவுக்கொள்கைகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.