காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை அடிப்படையிலானது - திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு


காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை அடிப்படையிலானது - திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:44 AM IST (Updated: 24 Feb 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

திருப்பூர்,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருப்பூர் ராயபுரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம்நடந்தது. இதில் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கட்சிகளுக்கு கொள்கை அளவில் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. ஜாதி, மத, மொழி இன வேறுபாடு இல்லாமல் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே இரு கட்சிகளின் கொள்கை. தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கவர்னரிடம் கூறிய பா.ம.க. இன்று அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அப்படியென்றால் அது ஊழல் கூட்டணி தான் என்று சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணி அமைத்ததை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழகத்தில் மதவாதம் காலூன்ற எப்போதும் பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜனதா தமிழகத்தில் காலூன்றவும் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி, இளம் வாக்காளர்களை பார்த்து ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என்றார். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுதான் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதா?.

கடந்த தேர்தலில் முதல்முறை வாக்களித்த வாக்காளர்கள் மோடிக்கு வாக்களித்தார்கள். அவர்கள் இன்று நாடு முழுவதும் வெகுண்டெழுந்து இருக்கிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது ஆகும். ஜனநாயக அரசு அமைய நாம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பா.ஜனதா அரசு சொல்லி வாக்கு கேட்டது. விவசாயிகள் வருமானம் கடந்த 5 ஆண்டுகளாகியும் இரட்டிப்பாக்கப்படவில்லை. மாறாக விவசாய விளைபொருட்களின் விலை குறைந்துள்ளது. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கப்போகிறேன் என்று சொன்ன மோடி நாளை(இன்று) விவசாய குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கப்போகிறார். விவசாய குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரத்தில் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகிறார்.

இது ஓட்டுக்காக கொடுக்கிற லஞ்சம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த பணத்தை 12 கோடி இந்திய விவசாயிகளுக்கு கொடுக்கப்போகிறார். ஆனால் இந்த பணம் நிலம் வைத்துள்ள பெரும் விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் கிடைக்கப்போகிறது. விவசாய தொழிலாளர்களுக்கு, நகர்ப்புற ஏழைக்கு கிடைக்கப்போவது இல்லை.

ரபேல் போர் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இந்த அரசுக்கு அமைச்சர் தேவையில்லை. அமைச்சரவை தேவையில்லை. அனைத்து முடிவுகளையும் ஒரே மனிதர் எடுக்கிறார். இந்த நாடு சர்வாதிகார நாடாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொராஜ் தேசாய், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் அலங்கரித்த நாற்காலியில் சர்வாதிகாரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். 5 ஆண்டு காலம் இந்த சர்வாதிகாரியை பார்த்து விட்டு மீண்டும் அந்த சர்வாதிகாரிக்கு ஆட்சியை தரப்போகிறீர்களா?.

இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அதே இந்திய விவசாயி ஒருவருக்கு கடன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாக உள்ளது. அந்த கடனை விவசாயி எப்படி அடைக்க முடியும். அதனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவருடைய உயிரை காப்பாற்ற வேண்டும். கடன் ரத்து என்பது விவசாயியை காப்பாற்றும் வேலை. அதைத்தான் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. கல்வி உரிமை சட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அகில இந்திய அளவில் மத்திய அரசு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு, விவசாய நிலங்களை கொள்முதல் செய்தால் 4 மடங்கு சந்தை விலையை தர வேண்டும் என்பதை கொண்டு வந்தது, உணவு பாதுகாப்பு சட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது, பட்டினியை ஒழித்தது காங்கிரஸ் அரசு.

இந்தியாவில் இன்னும் வறுமை ஒழியவில்லை. அதை ஒழிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கல்விக்கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு. 34 கோடி பேருக்கு ‘ஜீரோ பேலன்ஸ்’ வங்கிக்கணக்கு தொடங்கிய அரசு காங்கிரஸ் அரசு. இப்போது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தையும் திருப்பி வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் ஜனநாயக அரசு அமைய வேண்டும். ஜனநாயக திருவிழாவாக தேர்தல் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்றால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். இன்று மதத்தை வைத்து ஆட்சி செய்கிறார்கள். தமிழகத்தில் பா.ம.க. கட்சி இரு தரப்பிலும் பேசி விட்டு பின்னர் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை அமைத்துள்ளனர். அவர்கள் நிலைபாட்டை நாம் என்ன சொல்ல. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைய நாம் கடுமையாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், செயல் தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் காளிமுத்து, கணேஷ், கட்சியின் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணன், கோபி, மனோகரன், ரவி, தென்னரசு, சரவணன், சக்திவேல், நிர்வாகிகள் செந்தில்குமார், எஸ்.பி.அழகப்பன், கதர் தங்கராஜ், சிவசுப்பிரமணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story