மணல் கடத்தலை தடுத்த பரமக்குடி சப்–கலெக்டரை இடமாற்றம் செய்தது ஏன்? தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மணல் கடத்தலை தடுத்த பரமக்குடி சப்–கலெக்டரை இடமாற்றம் செய்தது ஏன்? தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 26 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுத்த சப்–கலெக்டரை இடமாற்றம் செய்தது ஏன் என்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த முத்து சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 40 எக்டேர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 300 ஏக்கர் நன்செய் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அங்குள்ள எங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்தின் அருகில் தனியார் ஒருவருடைய நிலத்தில் 3 அடிக்கு கீழ் மணல் உள்ளது. இங்கு விவசாய நிலத்தை சமன் செய்வது என்றும், சவடுமண் எடுக்கவும் அனுமதி பெற்றுவிட்டு, அரசின் விதியை மீறி, 4 பொக்லைன் மூலம் சுமார் 40 அடி ஆழத்தில் 300 லாரிகளில் இரவு பகலாக மணலை கடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத மணல் கடத்தலால், எங்கள் விவசாய நிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் ஆதாரமும் பாதிப்பு அடையும். பூலாங்குளம் கண்மாயின் அருகில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கீழச்செல்வனூர் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. அங்குள்ள பறவைகள், பள்ளிக்குழந்தைகள், முதியவர்கள் என மணல் லாரிகளால் பாதிப்படைகின்றனர். எனவே விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் கருதி எங்கள் பகுதியில் நடக்கும் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, “இந்த பகுதியில் உள்ள ஆற்றுப்படுகை அருகில் உள்ள தோட்டங்களில் குறிப்பிட்ட ஆழத்தில் சவடு மண் உள்ளது. அதற்கு கீழே ஆழமாக தோண்டினால் மணல் கிடைக்கிறது. எனவே இந்த பகுதியில் சவடு மண் எடுக்க அனுமதி பெறுகின்றனர்.

ஆனால் எந்திரங்கள் மூலம் ஆழமாக தோண்டி, மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பகுதியில் இது போன்ற மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பரமக்குடி சப்–கலெக்டரை பணி இடமாற்றம் செய்துள்ளனர்“ என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், மணல் கடத்தலை தடுக்க ஆர்வத்துடன் ஈடுபட்ட பரமக்குடி சப்–கலெக்டரை பணி இடமாற்றம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல், தேர்தல் நடவடிக்கைகளையொட்டி பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பரமக்குடி சப்–கலெக்டரும் அடங்குவார் என்று தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இதுகுறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

பின்னர் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள், தங்கள் பகுதியில் சவடு மண் அள்ள எத்தனை இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அங்கெல்லாம் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? என பதில் மனு தாக்கல் செய்யவும், கடலாடி அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் பட்டா நிலத்தில் சவடு மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிக்கு தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.


Next Story