பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
பட்டா பெயர் மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொந்தளத்தை சேர்ந்தவர் பி.கே.வடிவேல். இவர் தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி கடந்த 2003–ம் ஆண்டு நவம்பர் மாதம் 11–ந் தேதி கொந்தளம் ‘அ’ பிரிவு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியாக சேலம் மாவட்டம் கங்கவள்ளி தாலுகா வீரகனூரை சேர்ந்த நீலகண்ட சுப்பிரமணியன் (வயது 60) பணியாற்றினார்.
அவர் பட்டா பெயர் மாறுதலுக்கான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு அனுப்ப வடிவேலிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் வடிவேலுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் அவர் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்ற வடிவேல், கிராம நிர்வாக அதிகாரி நீலகண்ட சுப்பிரமணியனிடம் ரூ.1,000 கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நீலகண்ட சுப்பிரமணியனை கைது செய்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நீலகண்ட சுப்பிரமணியனுக்கு லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும், இந்த தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், நீலகண்ட சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.