“தமிழகத்தில் நீர்மேலாண்மையை செயல்படுத்தினால் வறட்சி இருக்காது” மதுரை ஐகோர்ட்டு கருத்து
‘‘தமிழகத்தில் நீர் மேலாண்மையை முழுமையாக செயல்படுத்தினால் வறட்சி இருக்காது’’ என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
மதுரை,
புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கொள்ளிடத்தில் ஆற்றுப்பாலம் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இதுபோன்ற நிலையை தவிர்க்கும் வகையில் எங்களது 85 ஆண்டு கால கோரிக்கையான கொள்ளிடம் காவிரி உபரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அக்னி ஆறு, தெற்கு வெள்ளாறு ஆகியவற்றுடன் இணைத்தால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் அடைவார்கள். அதுமட்டுமல்லாமல் குடிநீர் பிரச்சினை தீரும்.
மேலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதையும் தடுக்க முடியும். எனவே கொள்ளிடம் காவிரி ஆற்றுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கிருபாகரன், “நீர் மேலாண்மையை முழுமையாக செயல்படுத்தினால், தமிழகத்தில் வறட்சி என்பதே இருக்காது. குடிநீர் பிரச்சினையும் இருக்காது. எனவே தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? முறையாக குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரினால் அணைகளில் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைக்கலாம்“ என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து பொதுப்பணித்துறையின் நீர் ஆதார பிரிவு முதன்மை பொறியாளர், காவிரி ஆற்றின் தொழில்நுட்ப குழு தலைவர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 14–ந்தேதி ஒத்திவைத்தனர்.