2019-20-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சமூக நலம், சத்துணவு திட்டத்துக்காக ரூ.5,127 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சரோஜா தகவல்


2019-20-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சமூக நலம், சத்துணவு திட்டத்துக்காக ரூ.5,127 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சரோஜா தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2019 5:00 AM IST (Updated: 27 Feb 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

2019-20-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துக்காக ரூ.5,127 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சரோஜா கூறினார்.

ராசிபுரம்,

ராசிபுரத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்திற்காக ரூ.5127 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் சத்துணவு திட்டத்துக்காக மட்டும் ரூ.1729.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்காக ரூ.98.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 43 ஆயிரத்து 229 சத்துணவு மையங்கள் மூலம் ரூ.51.92 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்த முதல்- அமைச்சருக்கு சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், பெற்றோர்கள், சத்துணவு திட்டத்துறை மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாற்றுத்திறனாளி நலனுக்காக ரூ.569 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதுகு தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு வாகனம் வழங்கப்படும். இதனால் 3 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். பணிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கப்படும். இதில் 3 ஆயிரம் பேர் பலன் பெறுவார்கள்.

ராசிபுரத்தில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் அனைத்து சாலைகளும் ரூ.34 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். பைபாஸ் சாலை 2-ம் கட்டப் பணிகள் (அணைப்பாளையம் முதல் பொன்குறிச்சி வரை) ரூ.25 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும். ராசிபுரம் நகராட்சி, அத்தனூர், வெண்ணந்தூர், பட்டணம், பிள்ளாநல்லூர் பேரூராட்சிகள் அடங்கிய பகுதிகளுக்கு ராசிபுரம்-நெடுங்குளம் புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 168 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அண்ணாசாலை அரசு பள்ளிக்கு விளையாட்டு அரங்கம், 16 வகுப்பறைகள் கட்டப்படும்.

வெளி மாநிலத்திற்கு மின்சாரம் தரும் அளவிற்கு ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரம் பகுதியில் 56 ஏக்கர் பரப்பளவில் 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் துணை மின் நிலையம் வரும் நிதியாண்டில் அமைக்கப்படும். குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்காக ரூ.9.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

முன்னதாக அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா ராசிபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தாட்கோ மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ராசிபுரம் நகர அ.தி.மு.க.செயலாளர் பாலசுப்பிரமணியன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.கே.பொன்னுசாமி, மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் பிரகாசம், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ராதா சந்திரசேகர், தாட்கோ அதிகாரிகள், ராசிபுரம் சமூக திட்ட தாசில்தார் பாஸ்கர், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் நடேசன், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story