திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.82 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.82 கோடி
x
தினத்தந்தி 28 Feb 2019 3:45 AM IST (Updated: 28 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.82 கோடியை தாண்டியது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதம் (பிப்ரவரி) பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார்.

உதவி ஆணையர்கள் செல்வராஜ் (திருச்செந்தூர்), ரத்தினவேல் பாண்டியன் (நாகர்கோவில்), சங்கர் (நெல்லை), ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி அய்யப்ப சேவா சங்கத்தினர், சிவகாசி உழவார பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 767-ம், கோசாலை உண்டியலில் ரூ.82 ஆயிரத்து 289-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.32 ஆயிரத்து 160-ம், மாசித் திருவிழா தற்காலிக உண்டியலில் ரூ.10 ஆயிரத்து 876-ம், கோவில் அன்னதான உண்டியலில் ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்து 233-ம், மேலக் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.9 ஆயிரத்து 473-ம் இருந்தது.

பக்தர்கள் உண்டியல்களில் மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சத்து 81 ஆயிரத்து 798-யை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் ஒரு கிலோ 586 கிராம் தங்கமும், 21 கிலோ 395 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

Next Story