இலங்கையில் நடந்த கொலையில் தேடப்பட்டவர் ராமநாதபுரத்தில் கைது - மேலும் 3 பேரும் சிக்கினர்


இலங்கையில் நடந்த கொலையில் தேடப்பட்டவர் ராமநாதபுரத்தில் கைது - மேலும் 3 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Feb 2019 10:45 PM GMT (Updated: 27 Feb 2019 9:54 PM GMT)

இலங்கையில் நடந்த கொலையில் தேடப்பட்டவர் ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவி செய்ததாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

இலங்கை கொழும்பை சேர்ந்த தயானந்த் என்பவரது மகன் சங்கசிராந்தா (வயது33). இவர் அங்கு நடந்த கொலை வழக்கில் அந்த நாட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் ராமநாதபுரத்துக்கு தப்பி வந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்துள்ளார். அவருடன் கொழும்பை சேர்ந்த சப்ராஸ்(23) என்பவரும் இருந்துள்ளார்.

இவர்களது நடமாட்டம் குறித்து அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் தகவலின்பேரில் அவர்களை ராமநாதபுரம் போலீசார் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கசிராந்தா, கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதும், சப்ராஸ் அவரது டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரும் தற்போது மண்டபம் சேதுநகரில் வசித்து வருபவருமான ரியாஸ்(22), மண்டபத்தை சேர்ந்த முகமது கயூம்(22) ஆகியோர் இதற்கு உதவியது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். முன்விரோதத்தில் தம்மை தீர்த்துக்கட்ட சிலர் திட்டம் தீட்டியதால் தமிழகத்துக்கு வந்து பதுங்கியதாகவும், தமக்கு உதவி செய்திட டிரைவரை அழைத்து வந்ததாகவும் சங்கசிராந்தா தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story