கட்டிட தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை திருப்பூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு


கட்டிட தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை திருப்பூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 3 March 2019 5:15 AM IST (Updated: 3 March 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே கட்டிட தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மேற்குபதி மரியபுரத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கிருத்திகா (26). இவர்களுக்கு 5 வயதிலும், 3 வயதிலும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு முன்பு கிருத்திகாவும், அதே பகுதியை சேர்ந்த மது என்கிற மதியழகன் (28) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் கிருத்திகாவின் பெற்றோர் கேசவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகும் கிருத்திகாவுக்கும், மதியழகனுக்கும் கள்ளத்தொடர்பு நீடித்தது. கடந்த 2017–ம் ஆண்டு கிருத்திகா தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு மதியழகனுடன் சென்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாழ்ந்து வந்தார். இதை அறிந்த கேசவன் போலீசில் அளித்த புகாரின் பேரில் கிருத்திகாவை போலீசார் அழைத்து வந்தனர். ஆனால் கிருத்திகா தனது கணவர் கேசவனுடன் வாழ விருப்பமில்லை என்று போலீசில் கூறியதுடன் தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கிருத்திகா, மதியழகனை தொடர்பு கொண்டு ‘கேசவன் இருக்கும் வரையில் நம்மை சேர விடமாட்டான். அவனை எப்படியாவது கொலை செய்து விடு. நாம் இருவரும் திருமணம் செய்து சந்தோ‌ஷமாக இருக்கலாம்’ என்று கூறியுள்ளார். உடனே கிருத்திகாவிடம் மதியழகன், ‘உன் கணவரோடு சேர்ந்து சந்தோ‌ஷமாக இருப்பதுபோல் நடி’ என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கிருத்திகா தனது மகன்களை அழைத்துக்கொண்டு மீண்டும் தனது கணவர் வீட்டில் குடியிருந்துள்ளார். அதன்பிறகு மதியழகனை செல்போனில் தொடர்பு கொண்ட கிருத்திகா, ‘கேசவன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம் பிரச்சினை தீராது. அவனை சீக்கிரம் கொலை செய்து விடு’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 29–6–2017 அன்று இரவு கேசவன் வீட்டில் தனது மகன்கள் 2 பேருடன் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். வீட்டின் கதவு தாழிடப்படாமல் இருந்துள்ளது. நள்ளிரவு 12.30 மணி அளவில் மது போதையில் அங்கு வந்த மதியழகன் கதவை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்துச்சென்று கேசவனின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பினார்.

இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக மதியழகனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கேசவனை கொலை செய்து விட்டு நள்ளிரவு 2 மணி அளவில் மதியழகன் தனது செல்போனில் இருந்து கிருத்திகாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் ‘நீ கொல்ல சொன்ன நான் கொன்றேன் செல்லம்’ என்று கூறியிருந்தார். அதை முக்கிய ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஜியாபுதீன், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக மதியழகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக கிருத்திகாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் முருகேசன் ஆஜரானார்.


Next Story