பல்லடம் அருகே பெண்ணை கொலை செய்த கணவர் கைது நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றது அம்பலம்


பல்லடம் அருகே பெண்ணை கொலை செய்த கணவர் கைது நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அவரது கணவரே கொன்றது தெரியவந்தது.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி (வயது 38). இவருடைய மனைவி மீராயாஸ்மின் (32). இந்த தம்பதிக்கு கிஷோர்(12), பிரசன்னா(7) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளர்களாக வேலைசெய்து வந்தனர். மகன்கள் இருவரும் தர்மபுரியில் உள்ள முருகசாமியின் தந்தை வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

கணவன்–மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகசாமி, தனது மனைவி மீராயாஸ்மினின் தலை, வயிறு என்று பல இடங்களில் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மீராயாஸ்மின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீராயாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முருகசாமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தையல் தொழிலாளி முருகசாமி பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பல்லடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்துசென்றனர். பின்னர் அங்கு நின்றிருந்த முருகசாமியை பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மனைவி மீராயாஸ்மின் மீது நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன்–மனைவி இருவர் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் வேலை பார்த்த இடத்தில் மற்ற ஆண்களுடன் மீராயாஸ்மின் பேசுவது முருகசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த முருகசாமி வீட்டில் இருந்த அரிவாள்மனையின் கட்டையால் மீராயாஸ்மின் தலையில் தாக்கினார். மேலும் கத்தியால் அவரை குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இது தொடர்பாக முருகசாமியின் வீட்டு உரிமையாளரான பாக்கியலட்சுமி என்ற குப்பாத்தாள் (59) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மீராயாஸ்மின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் முருகசாமியின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story