பல்லடம் அருகே குடிபோதையில் தகராறு: தொழிலாளி கொலை; நண்பர் கைது


பல்லடம் அருகே குடிபோதையில் தகராறு: தொழிலாளி கொலை; நண்பர் கைது
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-04T01:10:25+05:30)

பல்லடம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் ராமராஜ்(வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுக்கு ரமேஷ், தனசேகர் என்ற 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ்(50). கூலித்தொழிலாளி.

நண்பர்களான ராமராஜும், சின்னராஜும் மதுகுடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். கடந்த 1–ந்தேதி மதியம் 2 மணியளவில் அவர்கள் இருவரும் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்துள்ளனர்.

அப்போது, குடிபோதையில் இருந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ், ராமராஜை அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் ராமராஜ் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் ராமராஜை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் நண்பரை அடித்துக்கொலை செய்த சின்னராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story