உச்சிப்புளி அருகே தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது


உச்சிப்புளி அருகே தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே தோப்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், வேதாளை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள வாணியங்குளத்தில் உள்ள தோப்பு ஒன்றில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் போலீசார், தனிப்பிரிவு போலீஸ்காரர் மருது உள்ளிட்டோர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விஜய ஆனந்த் என்பவருக்கு சொந்தமான தோப்பில் 55 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக அங்கிருந்த கோபு என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மீனவர்கள் வலையில் சிக்கும் கடல் அட்டைகளை கடற்கரைக்கு சென்று வாங்கி வந்து மொத்தமாக பதப்படுத்தி அதன் பின்னர் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து தோப்பின் உரிமையாளர் விஜய ஆனந்த், கோபு ஆகியோரை போலீசார் கைது செய்து அங்கிருந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story