மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதம்


மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான ஆனையூர், வண்டியூர், ஆத்திகுளம், கங்காநகர், சூர்யாநகர், பரசுராம்பட்டி, மகாலட்சுமி நகர், அய்யர்பங்களா, சீதாலட்சுமிநகர், ராமையாநகர், நாகலட்சுமிநகர் உள்ளிட்ட 11 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிக்குட்பட்ட மக்கள், குடியிருப்போர் நல சங்கங்களின் மூலம் மதுரை–திருமங்கலம் சுற்றுச்சாலை வண்டியூர் பிரிவு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மூர்த்தி பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதியில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 11 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்க வேண்டும், குடிநீர், சாலை வசதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

எனவே, இந்த பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை போக்க காவிரி தண்ணீரை இப்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். மண் ரோடாக உள்ள சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போராட்டத்திற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து சட்டமன்றத்தில் 4 முறை பேசியதோடு, கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தேன். சம்பந்தப்பட்ட அமைச்சரையும், முதல்–அமைச்சரையும் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் அரசு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தனராஜ் என்பவர் கூறும்போது, அடிப்படை வசதிகளை கேட்டு போராட்டம் நடக்கிறது. எங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மாநகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம். எனவே உடனடியாக எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.


Next Story