புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோவின் கோரிக்கைகள் தொடர்பான மனு, மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியனும், ஜாக்டோ–ஜியோ தரப்பில் மூத்த வக்கீல் பிரசாத், சங்கரன் மற்றும் லஜபதிராய் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது நடந்த வாதம் வருமாறு:–
மூத்த வக்கீல் பிரசாத்:– அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஐகோர்ட்டு தலையிட்டு கடந்த 21.9.2017 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை இடைநீக்கம் செய்தும், பணியிடமாறுதல் செய்தும் பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, பணியிட மாறுதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
நீதிபதிகள்: வேலைநிறுத்தம் உரிமையாக இருந்தாலும் கூட, தேர்வு நேரங்களில் மட்டும் வேலைநிறுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாணவர்களை மிரட்டும் வகையில் ஒவ்வொரு முறையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, பணியிட மாறுதலை ரத்து செய்ய முடியாது.
பிரசாத்: ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு வழங்கும் போது, அரசின் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 1.1.2016–ல் 7–வது சம்பள குழு பரிந்துரைக்கப்பட்டு, அதன் முரண்பாடுகள் தற்போது வரை களையப்படாமல் உள்ளது. நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளன. 9 மாதங்கள் ஆன பின்னரும் நிலுவைத்தொகை வழங்கவில்லை. தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் நிலுவைத்தொகை பாக்கி இல்லாமல் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஊழியர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். மேலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
நீதிபதிகள்: புதிய பென்சன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னரே அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இப்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு வக்கீல்: நாடு முழுவதும் புதிய பென்சன் திட்டம் அமலில் உள்ளது.
பிரசாத்: டெல்லி சட்டசபையில் புதிய பென்சன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது போல, நிறைய மாநிலங்களில் மத்திய அரசின் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள்ளாகவே வாக்கெடுப்பு நடத்தி தங்களது சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்திக்கொண்டனர். இவர்களில் யாரும் ஊழல் செய்வதில்லையா?
அரசு வக்கீல்: கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் போது தான், அரசு ஊழியர்களுக்கு பயம் இருக்கும். இல்லையெனில் ஒவ்வொரு முறையும் அரசை மிரட்டும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை வழக்கமாக்கி விடுவர். ஓய்வு பெற்றவர்கள்தான் அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு பணி செய்யும் ஊழியர்களை தவறாக வழிநடத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட வைக்கின்றனர்.
அதனை தொடர்ந்து, நிதித்துறை சார்பு செயலாளர் வெங்கடேசனை அழைத்து, ‘‘அரசின் நிதி நிலைமை தெரிந்த நீங்களே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் போது, பொதுமக்கள் அனைவரும் இந்த போராட்டத்துக்கு எதிரான மனநிலையில் இருந்தனர் என்பதை ‘வாட்ஸ்–அப்’ மூலம் தெரிந்து கொண்டோம். அரசு ஊழியர்கள் வாழ்க்கைத்தரம், சாதாரண மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை எண்ணிப்பாருங்கள்’’ என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
பின்னர், நிதித்துறையில் உள்ள வாசு, லோகநாதன், வெங்கடேசன், பர்வீன் ஆகியோரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் 4 பேர் மீதான இடைநீக்கத்தை (சஸ்பெண்டு) ரத்து செய்யலாமே? என்று கேட்டனர்.
அரசு வக்கீல்: துறைசார்ந்த நடவடிக்கை என்பதால், அவர்களுடைய துறையினர் தான் பதிலளிக்க வேண்டும்.
வக்கீல் சங்கரன்: சி.பி.எஸ். என்று சொல்லப்படும் புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்று வரை ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை.
அரசு வக்கீல்: முற்றிலும் தவறான தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். ஒரு சில தனிநபர்களின் வழக்கை ஒட்டு மொத்த ஊழியர்களின் பிரச்சினையாக முன்வைக்கின்றனர். இதுநாள் வரை, புதிய பென்சன் திட்டத்தில் 11 ஆயிரத்து 335 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது மனுக்களின் பரிசீலனைக்கு பின்னர் ரூ.441 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 116 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
சங்கரன்: புதிய பென்சன் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படும் பணம் எங்கு செல்கிறது? என்று தெரியவில்லை.
அரசு வக்கீல்: பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி அரசுக்கருவூலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தேவைப்படும் போது பணப்பலன்களை உடனடியாக வழங்க முடியும்.
சங்கரன்: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர வேண்டும். 5 ஆயிரம் ஊழியர்கள் மேல், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
பிரசாத்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இரவு நேரத்தில் கைது செய்வது, அவர்களுக்கான கழிப்பறைகளை மூடிவைப்பது என அராஜக செயல்களில் அரசு ஈடுபட்டதுடன், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு வாதம் நடந்தது.
பின்னர் நீதிபதிகள், வருகிற 11–ந் தேதி வக்கீல் சங்கரன், புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து கேள்வியாக மனு தாக்கல் செய்ய வேண்டும். அரசு தரப்பில், அந்த கேள்விகள், சந்தேகங்களுக்கு ஆதாரங்களுடன் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.