ராகுல்காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு புதுவையில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


ராகுல்காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு புதுவையில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 March 2019 11:45 PM GMT (Updated: 6 March 2019 8:39 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு புதுவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று 100 அடி ரோட்டில் உள்ள சன்வே ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் மாநிலம் புலவாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

விமானப்படை வீரர்கள் பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்கள். விமானப்படை வீரர்கள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

தேசத்தை பாதுகாக்க வீரசாகசம் செய்த விமானி அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்யாமல் ராணுவம் நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஒளிவுமறைவின்றி மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு புதுவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்

கடந்த 5 ஆண்டுகளாக மதவாத, பிரிவினைவாத சக்திகளை ஊக்குவித்து தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து நாட்டின் பொருளாதாரத்தையும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் சீர்குலைத்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்கள் சக்தியை ஓரணியில் திரட்டி நாடாளுமன்ற தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story