போலியோ சொட்டு மருந்து முகாம் விழிப்புணர்வு வழக்கு, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்


போலியோ சொட்டு மருந்து முகாம் விழிப்புணர்வு வழக்கு, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2019 11:00 PM GMT (Updated: 7 March 2019 6:33 PM GMT)

போலியோ சொட்டு மருந்து முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் நடிகர்கள் அஜித்குமார், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரர் களாக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரையை சேர்ந்த ஜான்சிராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் போலியோ நோய் தாக்குதல் குழந்தைகள், சிறுவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நம் நாட்டில் 1995-ம் ஆண்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது போலியோ சொட்டு மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகம் உள்பட நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 10-ந்தேதி சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளது” என்றார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, “போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்படுவது இல்லை” என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், “நடிகர்கள் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். எனவே இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், நடிகர்கள் அஜித்குமார், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எளிதாக மக்களை சென்றடையும்.

இந்த வழக்கு குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Next Story