விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: காங்கேயம், பல்லடத்தில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கேயம், பல்லடத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
காங்கேயம்,
தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம், பவர் கிரீட் நிறுவனம் ஆகியவை தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து வருகின்றன. உயர்மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுவதாகவும் கூறி இந்த திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையில் தரை வழியாக மின்சாரம் எடுத்துச்செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து நாமக்கல் மாவட்டம் படை வீட்டில் 6–வது நாளாக விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த விவசாயிகளை மத்திய–மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதை கண்டித்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் உள்ள நிழலி கவுண்டம்பாளையம், வஞ்சிபாளையம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.
இதுபோல் விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகள், தோட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் பல்லடம் பகுதியில், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், வலையபாளையம், கிடாத்துறை புதூர், பள்ளிபாளையம், பரமசிவம்பாளையம் உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் தங்களது வீடு, தோட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.