‘தாயாரை அவதூறாக பேசியதால் அடித்து கொன்றேன்’ பேராசிரியர் மனைவி கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
பேராசிரியர் மனைவி கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரியை சேர்ந்தவர் வைரவன்(வயது 45). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அனிதா(42). கடந்த 5–ந்தேதி வீட்டின் படுக்கை அறையில் அனிதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவர்களது குழந்தைகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய பின்னரே கொலை சம்பவம் வெளியே தெரியவந்தது.
அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பா£த்தீபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அனிதாவின் வீட்டு அருகே வசிக்கும் அக்கம்பக்கத்தினரிடம் விவரங்களை சேகரித்தனர். வைரவனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் யார்? என விசாரித்தனர்.
பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, போலீசாருக்கு ஒரு வாலிபர் அடிக்கடி அனிதா வீட்டுக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக வீட்டின் அருகில் வசித்த சிலரிடம் விசாரித்த போது தென்றல் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ்பிரசாத்(22) என்பவர் தான் அங்கு வந்து சென்றது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அனிதாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அனிதாவிற்கும், எனக்கும் நீண்டநாட்களாக கள்ளத்தொடர்பு இருந்தது. 5–ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அனிதாவின் வீட்டிக்கு சென்றேன். அங்கு இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம். அப்போது எனது தாயாரை தகாத வார்த்தைகளால் அனிதா திட்டினார். அப்போது ஆத்திரமடைந்து அனிதா தலைமுடியை பிடித்து வீட்டின் சுவரில் தள்ளினேன். மேலும் குக்கர் பாத்திரத்தால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தேன் என வெங்கடேஷ்பிரசாத் தெரிவித்தார். இதைதொடர்ந்து வெங்கடேஷ்பிரசாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.