திருப்பூரில் 2 குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 481 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் வடமாநில வாலிபர்கள் 5 பேர் கைது


திருப்பூரில் 2 குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 481 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் வடமாநில வாலிபர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2019 4:15 AM IST (Updated: 10 March 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 2 குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 481 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த கணபதி நகரில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஜாய் சார்லி தலைமையில் போலீசார் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது 3 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் கீழ் தளத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது ஏராளமான மளிகை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. அதை முழுமையாக களைத்து பார்த்த போது அதன் உள்ளே புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு இருந்து 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ், பப்பு, கேவல்ராம், கானாராம் ஆகிய 4 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் தியாகி குமரன் காலனியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு குடோனில் இருந்த 281 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கு இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார், துணை கமி‌ஷனர் உமா ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story