நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள்


நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள்
x
தினத்தந்தி 13 March 2019 4:45 AM IST (Updated: 13 March 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக சென்னை வருகிறார்.

இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்.

தொடர்ந்து அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.

இந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் ஒரே மேடையில் பேசுகிறார்கள். இதையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கும் பணியும், ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணியும் இரவு, பகலாக நாகர்கோவிலில் நடந்தது.

இந்தநிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விழா மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது அவர் பணிகளை விரைவுபடுத்த கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

அப்போது தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், மூத்த தலைவர் குமரி அனந்தன், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., மயூரா ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பிரின்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி நாகர்கோவிலில் வரவேற்பு பேனர்களும், கொடி தோரணங்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளிலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் நகரம் களை கட்டியுள்ளது. இந்த பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் மேற்பார்வையில், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1,500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வரக்கூடிய தொண்டர்களின் வாகனங்களை கன்கார்டியா பள்ளி உள்ளிட்ட இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்று காலை ராகுல்காந்தி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Next Story