பா.ஜனதா தலைவர்களை பற்றி கூறாமல் காமராஜர், படேலை கூறி ஓட்டு கேட்பது ஏன்? மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி


பா.ஜனதா தலைவர்களை பற்றி கூறாமல் காமராஜர், படேலை கூறி ஓட்டு கேட்பது ஏன்? மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 13 March 2019 11:15 PM GMT (Updated: 13 March 2019 9:13 PM GMT)

பா.ஜனதா தலைவர்களை பற்றி கூறாமல் காமராஜர், படேலை கூறி ஓட்டு கேட்பது ஏன்? என்று மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகர்கோவில்,

இமயம் முதல் குமரி வரையில் பரந்து விரிந்த இந்திய துணைக்கண்டத்தின் அடிமுனையில் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம். இந்திய நாடு தனக்கான ஒரு புதிய பிரதமரை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக கடமை இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. இந்தியா யாரை பிரதமராக தேர்வு செய்ய இருக்கிறதோ, அந்த இந்தியாவின் இளம் பிரதமர் ராகுல்காந்தி இந்த மேடைக்கு வந்துள்ளார். அப்படி இந்தியாவின் பிரதமராக இருக்கிற உங்களை, தி.மு.க.வின் சார்பில் மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளின் சார்பில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

உறுதியோடு சொல்கிறேன், இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்தி தான். உங்கள் கையில் இந்திய தேசம் பாதுகாப்பானதாக, மதசார்பற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இருக்கிறது. நம்பிக்கை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் ஆசையுமாக இருக்கிறது. ஆசை மட்டுமல்ல, அதுதான் உண்மையாக ஏற்பட இருக்கிற வரலாறு என்பதை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.

அதனால் தான் நான் யாரும் சொல்வதற்கு முன்னால் துணிச்சலோடு சொன்னேன், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று. தனிப்பட்ட ஸ்டாலினாக இதை நான் சொல்லவில்லை. 5 முறை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி மகனாக இதை நான் சொன்னேன். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று அன்னை இந்திராகாந்தியை முன்மொழிந்த கருணாநிதி மகனாக நான் சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் மருமகளே வருக என்று 2004-ம் ஆண்டு அன்னை சோனியாவை முன்மொழிந்த கருணாநிதி மகனாக நான் சொல்லுகிறேன். இளம் தலைவர் ராகுலே, ஒளிமயமான இந்தியாவை தருக என்று நான் கூறுகிறேன். ஒளிமயமான இந்தியாவை தாருங்கள் என்று சொல்லுகிறபோது, இந்தியா இருள்மயமாகி இருக்கிறது என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிகிறது.

நரேந்திரமோடி புதுப்புது உடைகளை உடுத்திக் கொண்டு, வித,விதமான தொப்பிகளை போட்டுக்கொண்டு நாடு, நாடாக அவர் சுற்றிக் கொண்டு வருகிறார். ஆக அவர் தான் ஒளிபெற்றிருக்கிறாரே தவிர, அவர் ஒளிமயமாக மாறிக்கொண்டிருக்கிறாரே தவிர இந்தியா ஒளிமயமானதாக இன்னமும் மாறிடவில்லை. அவர் வளர்ச்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று இருக்கக்கூடிய நிலை என்ன என்று சொன்னால் தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சி என்ற நிலையில் தான் இந்தியாவை பார்க்கிறேன்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது இந்த 3-வது நிதி ஆண்டில் 6.6 சதவீதம் குறைந்துள்ளது. மோடி வந்தால் புதிய திட்டங்கள் வரும், நிறுவனங்கள் திறக்கப்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இளைஞர்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால் இருக்கக்கூடிய நிலை, புதிய திட்டங்களும் வரவில்லை. புதிய நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. பிரதமர் ஆவதற்கு முன்னால் மோடி, கருப்பு பணத்தை ஒழிப்பது தான் எனது முதல் வேலை என்று சொன்னார். இந்தியாவுக்கு வெளியே 90 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் இருக்கிறது. அதை மீட்டு இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிகள் மூலமாக 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று சொன்னார், தந்திருக்கிறாரா? 15 லட்சம் ரூபாய் வேண்டாம், ரூ.15 ஆயிரமாவது, நான் இன்னும் கேட்கிறேன் 15 ரூபாயாவது டெபாசிட் செய்திருக்கிறாரா? இல்லை.

கருப்பு பணம் எந்த நாட்டில், எந்த வங்கியில் இருக்கிறது? அதையாவது மோடி விளக்கி இருக்கிறாரா? இல்லை. கண்கட்டி வித்தைக் காரனைப்போல கருப்பு பணம் இருக்கிறது, இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டினாரே தவிர, மீட்கவில்லை. கருப்பு பணம் என்று சொல்லி, நல்ல பணத்தை ஒழித்தார். ஒரு திருடனை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால் ஊரில் இருக்கக்கூடிய அனைவரையும் கைது செய்து அதில் இருந்து திருடனை கண்டுபிடிக்கக்கூடிய அதிபுத்திசாலிதான் பிரதமர் மோடி. ஆக ஒரு துக்ளக் தர்பாரை மோடி இன்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று சொன்னார் அவர். ரபேல் ஊழல் ஒன்று போதாதா? இந்த ஊழல் அம்பலமானதும் என்ன சொன்னார்? ஊழலே நடக்கவில்லை, பொய் சொல்கிறார்கள் என்று சொன்னார்கள். 40 சதவீதம் அளவுக்கு விலையைக்கூட்டி வாங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரத்தை அம்பலப்படுத்தியவர் இந்து ராம். அனைத்தையும் திருடிவிட்டதாக சொல்கிறார்கள். இதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். ஆனால் அவர் பயப்படவில்லை. தி.மு.க. சார்பில் அவருக்கு எனது மனதார, நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்மீது நடவடிக்கை எடுத்தால், நான் உரிமையோடு சொல்கிறேன், தி.மு.க. மட்டுமல்ல இங்கு இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் பக்கபலமாக இருப்போம். எனவே அவர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மோடிக்கு எதிராக இந்துவும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது. இந்து, ராம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து தான் நீங்கள் வெற்றிபெற நினைத்தீர்கள். ஆனால் அந்த இரண்டு வார்த்தைகளை பார்த்தே நீங்கள் பயப்பட வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. இப்போது தான் மோடிக்கு இந்தியாவின் நினைப்பே வந்திருக்கிறது. வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கக்கூடிய அவர் தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிற நேரத்தில் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்துகிறார். கடந்த சில மாதங்களாக மோடி தான் செல்கிற பயண திட்டத்தைப் பார்த்தால், கடந்த 30 நாட்களில் 155 திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியிருக்கிறார் என்று ஒரு தொலைக்காட்சியில் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்கள். மோடி பார்க்கும் ஒரே வேலை அடிக்கல் நாட்டு விழாதான். அந்த பணியை மட்டும்தான் அவர் செய்து வருகிறார்.

தற்போது திடீரென தலைவர் காமராஜரின் நினைவு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. 1966-ம் ஆண்டில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லி டெல்லியில் சங்பரிவார் அமைப்பினர் ஊர்வலத்தை நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் வன்முறையை தூண்டி விட்டார்கள். அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜரின் வீட்டுக்குள்ளே நுழைந்து தீவைத்த கொடுமையை செய்தனர். அப்படி பட்டவர்கள் காமராஜரைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? என்று நான் கேட்க விரும்புகிறேன். காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மோடி செய்ததுண்டா? அவர்கள் வடக்கே பட்டேல் பெயரை சொல்லியும், தெற்கே பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சொல்லியும் வாக்கு கேட்க நினைக்கிறார்கள்.

மோடியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. காரணம், உங்களுக்கு ஓட்டு வாங்க, மக்களிடம் ஆதரவு கேட்க உங்கள் கட்சி தலைவர்களின் பெயரை சொல்வதற்கு வக்கற்ற நிலையில் பா.ஜனதா இருக்கிறது. இதைவிட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது. தமிழகத்தில் மோடியின் எடுபிடி ஆட்சியாக, பினாமி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி என்பது கொத்தடிமையாக நடைபெறும் ஆட்சியாக இருக்கிறது. கொலை, கொள்ளை வழக்கு என மிரட்டி இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.-ஐ மிரட்டி பினாமி ஆட்சியை பா.ஜனதா நடத்தி வருகிறது.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமையால் துன்புறுத்தப்பட்டு, என்னென்ன கொடுமைகளுக்கெல்லாம் ஆளாகி இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கிறபோது தற்போது நடைபெறும் ஆட்சி வெறும் ஊழல் ஆட்சி மட்டுமல்ல, லஞ்சம்- லாவண்யம் நிறைந்த ஆட்சி மட்டுமல்ல, கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிற ஒரு அநியாயமான, அக்கிரமமான ஆட்சியை இன்று தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே நாம் சந்திக்க இருப்பது வெறும் தேர்தல் அல்ல, ஜனநாயகப்போர். வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அதிகார மாற்றம். ஆணவம் பிடித்த, பாசிச மோடியிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றப்போகிற ராகுல்காந்தியுடன் நாம் கைகோர்ப்போம். 2004-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வாங்கிக்கொடுத்த அணிதான் இந்த மேடையில் இருக்கிற அணி. இந்த தேர்தலிலும் 40-க்கு 40 என்ற வெற்றியை பெற்று உங்களை நான் டெல்லியில் வந்து சந்திப்பேன் என்ற உறுதியை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் ஆட்சி மாற்றம் இன்னும் சில வாரங்களில் உங்கள் கைக்கு வரப்போகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்னார். உங்கள் ஆட்சி ஏழைகளுக்காக நடைபெறுகிற ஆட்சியாக இருந்திட வேண்டும். நான் சாமானியனுக்காக ஆட்சி நடத்துகிறேன் என்று சொன்னவர் தலைவர் கருணாநிதி. அதேபோல் சாமானியர்களுக்காக நடைபெறுகிற ஆட்சியாக அது அமைந்திட வேண்டும். அதை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் உங்களை ஆதரிக்க ஒரேயொரு காரணம் நீங்கள் மோடி அல்ல, நீங்கள் ராகுல்... ராகுல்... ராகுல்.. என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story