நாகர்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது மாணவர்களுக்கு சப்ளை செய்ய முயன்றது அம்பலம்


நாகர்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது மாணவர்களுக்கு சப்ளை செய்ய முயன்றது அம்பலம்
x
தினத்தந்தி 17 March 2019 3:45 AM IST (Updated: 17 March 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு சப்ளை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று முன்தினம் ஆராட்டு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் பேக் அணிந்தபடி அந்த வழியாக வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் திடீரென திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் அறுகுவிளையை சேர்ந்த சிவகுமார் என்ற பாபு (வயது 22) மற்றும் ஆராட்டு ரோட்டை சேர்ந்த நாகமுத்தேஷ் (22) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 2¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்ய முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது?, நாகர்கோவிலுக்கு எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story