மாணவ–மாணவிகள் போராட்டத்தை தடுக்க வ.உ.சி. பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை போலீசார் நடவடிக்கை


மாணவ–மாணவிகள் போராட்டத்தை தடுக்க வ.உ.சி. பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 3:40 PM GMT)

மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க வ.உ.சி. பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்தபோது ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு இரவும், பகலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு பொதுவான பிரச்சினைக்கு இளைஞர்கள் வ.உ.சி. பூங்காவை தேர்ந்தெடுத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார்கள். பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரிகள் விடுமுறை என்பதால் ஈரோட்டை சேர்ந்த மாணவ–மாணவிகள் வ.உ.சி. பூங்காவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. எனவே மாணவ–மாணவிகள் வ.உ.சி. பூங்காவில் திரள்வதை தடுக்கும் வகையில் பூங்காவுக்கு பொதுமக்கள் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதற்காக வ.உ.சி. பூங்காவின் நுழைவு கதவு காலை 6 மணிக்கே மூடப்பட்டது. மேலும், அங்கு வீரப்பன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்கள் யாரையும் பூங்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சுவஸ்திக் கார்னரில் இருந்து பவானி ரோட்டுக்கு சென்று வரும், இருசக்கர வாகன ஓட்டிகள் பூங்கா வழியை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பூங்காவின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பூங்கா வழியாக செல்ல முடியாமல் திரும்பி சென்றனர்.


Next Story