நாடாளுமன்ற தேர்தல்: 1,661 துப்பாக்கிகள் ஒப்படைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்


நாடாளுமன்ற தேர்தல்: 1,661 துப்பாக்கிகள் ஒப்படைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 3:15 AM IST (Updated: 18 March 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,661 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரோகிணி பங்கேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உரிமம் பெற்ற 1,661 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையத்தில் இதுவரை ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், காவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைவரும் அவர்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இளம் வாக்காளர்கள் ஆர்வமாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் வந்தனா கார்க் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story