பெண்களை தாக்கி சங்கிலி பறிப்பு: சினிமா கேமராமேன் கைது


பெண்களை தாக்கி சங்கிலி பறிப்பு: சினிமா கேமராமேன் கைது
x
தினத்தந்தி 17 March 2019 10:45 PM GMT (Updated: 17 March 2019 10:00 PM GMT)

தனியாக நடைபயிற்சியில் ஈடுபடும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த சினிமா கேமராமேன் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் அதிகாலையில் நடைபயிற்சி செல்லும் பெண்களை தாக்கி, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து பரங்கிமலை போலீஸ் கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கெங்கைராஜ் மேற்பார்வையில் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கள் பாலசுப்பிரமணி, முத்துசாமி, சாந்தகுமார், பாண்டித்துரை, ஏட்டுகள் ரகு, பாலு, விஜயகாந்த் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கீழ்கட்டளையை சேர்ந்த பாரதி (வயது 55) என்பதும், இவர்தான் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆகும். சினிமாவில் உதவி கேமராமேனாக வேலை பார்த்து வந்த பாரதிக்கு சரியான தொழில் இல்லாததால் கடந்த சில மாதங்களாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் பெண்களை தாக்கி, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பாரதியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 18 பவுன் தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.

Next Story