வருசநாடு கிராமத்தில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி - பெண் உள்பட 4 பேர் கைது
வருசநாடு கிராமத்தில் போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு,
வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் குமிழரசன். அதே பகுதியில் இவருடைய தாத்தா பரமத்தேவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் குமிழரசன் விவசாயம் செய்து வருகிறார்.
அந்த நிலத்துக்கு வில்லங்க சான்று பெற குமிழரசன் பத்திர பதிவு அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அந்த நிலம் ஈஸ்வரன் மனைவி முத்துபிள்ளை (வயது 60) என்பவருடைய பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் குமிழரசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி (35), ரமேஷ் (33), முத்துபிள்ளை, மேலப்பூசணூத்து கிராமத்தை சேர்ந்த செல்வமணி (39), வருசநாடு கிராமத்தை சேர்ந்த பவுன் (40), தேவராஜ் நகரை சேர்ந்த அழகுராஜா (30) ஆகியோர் சேர்ந்து அந்த நிலத்துக்கு போலி ஆவணங்களை தயார் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த நில ஆவணத்தின் மூலம் தேனியில் உள்ள தனியார் வங்கியில் சுமார் ரூ.7 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட மலைச்சாமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் முத்துபிள்ளை, செல்வமணி, ரமேஷ், அழகுராஜா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மலைச்சாமி, பவுன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story