வங்கியில் 19 பேரின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.36½ லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது


வங்கியில் 19 பேரின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.36½ லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது
x
தினத்தந்தி 18 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 10:21 PM GMT)

லாடனேந்தலில் உள்ள வங்கியில் 19 பேர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ36 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

லாடனேந்தலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கியில் லாடனேந்தலை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 18.8.2016 முதல் 9.11.2018 வரை உள்ள காலத்தில் 19 பேர்களின் பெயரில் போலி நகைகளை அடமானமாக வைத்து ரூ.36 லட்சத்து 52 ஆயிரம் பெற்றுக்கொண்டாராம்.

இந்த வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை வங்கி நிர்வாகம் அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றி விட்டு, நகைகளை பரிசோதனை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் லாடனேந்தல் கிளைக்கு மதுரை அவனியாபுரம் கிளையை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் என்பவர் வந்து மாற்று பணியாற்றுவார். அவரும் போலி நகை குறித்த விவரத்தை வங்கிக்கு தெரிவிக்கவில்லையாம்.

இந்நிலையில் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ36 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்துள்ளது, வங்கியின் முதுநிலை மேலாளர் பவுன்ராஜ் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றபிரிவு சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டு திருமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் போலி நகை அடகு வைத்து மோசடி செய்த நகை மதிப்பாட்டாளர்கள் செந்தில்குமார் மற்றும் கதிரேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.


Next Story