பதவி நீட்டிப்பு விவகாரம்: போலீஸ் டி.ஜி.பி.க்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


பதவி நீட்டிப்பு விவகாரம்: போலீஸ் டி.ஜி.பி.க்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 19 March 2019 4:08 AM IST (Updated: 19 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

பணி நீட்டிப்பு விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். பதவி நீட்டிப்புக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்ச புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என தமிழக தலைமைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2017–ம் ஆண்டு நவம்பர் மாதம் போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சசிகலா அறையில் இருந்து, டி.கே.ராஜேந்திரன் மீதான புகார் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற கடிதம், சசிகலா அறைக்கு சென்றது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை காப்பாற்றும் நோக்கத்திற்காக, அந்த ஆவணங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன. எனவே டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், குட்கா முறைகேடு தொடர்பாக கோர்ட்டின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். புதிய டி.ஜி.பி.யை நியமித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர்.

ஏற்கனவே விசாரணை நடந்தபோது, ‘‘டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தபோது, அவர் மீது லஞ்ச புகார் தொடர்பான ஆவணங்கள் எதுவும் நிலுவையில் இல்லை’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே போல் முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் தரப்பில், லஞ்ச புகார் தொடர்பான வருமான வரித்துறையின் கடிதத்தை முறைப்படி அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

சசிகலா தரப்பில், ‘‘வருமான வரித்துறையினர், மேற்கண்ட ஆவணங்களை ஜெயலலிதா வீட்டில்தான் கண்டெடுத்துள்ளனர். அதற்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என வாதாடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘‘லஞ்ச புகார் ஆவணங்கள் கிடைத்த பின்னராவது, டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்து இருக்கலாமே?’’ என கேள்வி எழுப்பப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

இதேபோன்று மதுரை ஐகோர்ட்டில் கதிரேசன் தாக்கல் செய்த மற்றொரு வழக்கில், ‘‘குட்கா முறைகேடு தொடர்பாக தவறான தகவல்களை தாக்கல் செய்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர்.


Next Story