புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்? அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது


புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்? அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது
x
தினத்தந்தி 19 March 2019 11:15 PM GMT (Updated: 19 March 2019 10:15 PM GMT)

புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வைத்திலிங்கம் நிறுத்தப்படுகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றுவெளியாகிறது.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கும், அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி தலைமையிடம் பலர் சீட் கேட்டு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்தநிலையில் புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிகிறது. இதையொட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், சபாநாயகர் வைத்திலிங்கம், ஏ.வி.சுப்ரமணியன், சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.கே. தேவதாஸ் உள்பட முன்னணி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அங்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் புதுவை தொகுதிக்கான வேட்பாளராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கேசவனின் மகன் நாராயணசாமி போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


Next Story