ஆசை வார்த்தை கூறி மாற்று கட்சியினரை இழுப்பதா? காங்கிரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
ஆசை வார்த்தை கூறி மாற்று கட்சியினரை இழுப்பதாக காங்கிரஸ் மீது அ.தி.மு.க. குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சி அநாகரீகமான அரசியல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு மாற்று கட்சியில் உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்களை தேடி அவர்களை தனது கட்சியில் சேர ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆசைவார்த்தை கூறி தனது கட்சியில் சேர்ப்பதையே தினசரி வேலையாக காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.
ஒரு கட்சியில் உள்ளவர்கள், அவர்களுக்கு உள்கட்சியில் ஏற்படும் பிரச்சினைகள், தலைமையிடம் கருத்து வேறுபாட்டை மையப்படுத்தி வேறு கட்சிக்கு செல்வது அவரவர் சொந்த விருப்பம் ஆகும். ஆனால் மாற்று கட்சியில் உள்ளவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி கட்சி மாற வைப்பது மோசமான செயல்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே இந்த அரசு மீதும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டு அவரவர் வகிக்கும் சேர்மன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு முன்வந்துள்ளனர். தினந்தோறும் மாற்றுக்கட்சியினரிடம் பேரம்பேசி பொய் வாக்குறுதி கொடுத்து தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக்கொண்டிருப்பது நியாயமற்ற செயலாக முதல்–அமைச்சருக்கு தெரியவில்லையா?
மாற்று கட்சியினருக்கு ஆசைவார்த்தை கூறி தனது கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கும் காங்கிரசின் அடாவடி செயலை புதுவை அ.தி.மு.க. கண்டிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் இதே நிலைப்பாட்டை எடுத்து வருமேயானால் தேர்தலுக்கு பிறகு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத நிலை ஏற்படுவதை தங்களால் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.