நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கை: மாநிலம் முழுவதும் 33 ஆயிரம் பேர் கைது - டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் தகவல்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கை: மாநிலம் முழுவதும் 33 ஆயிரம் பேர் கைது - டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 10:51 PM GMT (Updated: 19 March 2019 10:51 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 33 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய போலீஸ் டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் கூறினார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலுக்கு மராட்டியம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு செய்யப்பட்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று 80 சதவீத போலீசார் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மாநிலத்தில் உள்ள 2 லட்சத்து 9 ஆயிரம் போலீசாரில் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

இதுதவிர 50 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர், 40 கம்பெனி மாநில ரிசர்வ் போலீசார், 38 ஆயிரத்து 353 ஊர்க்காவல்படை வீரர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

மாநில புலனாய்வு துறை கமிஷனர் மற்றும் சட்டம்- ஒழுங்கு ஐ.ஜி.யுடன் எல்லா வருவாய் மண்டலங்களிலும் நடந்து வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டேன். அமைதியான, நியாயமான முறையில் தேர்தலை நடத்த பாதுகாப்பு கொடுப்பதே எங்கள் நோக்கம். 95 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் உள்ள மாநிலத்தில் தேர்தல் நடத்துவது சவாலான ஒன்றாகும். சிறிய பிரச்சினைகளில் கூட கவனம் செலுத்தி வருகிறோம். தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப்பின்னணி உள்ள 33,211 பேரை கைது செய்து உள்ளோம்.

8 ஆயிரத்து 560 பேரிடம் நன்னடத்தை பத்திரம் எழுதிவாங்கி உள்ளோம். 3 ஆயிரத்து 132 பேரிடம் உறுதி மொழி பத்திரமும் எழுதி வாங்கி உள்ளோம்.

சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த 154 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து உள்ளோம். 15 ஆயிரத்து 767 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தினமும் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த பகுதிகளில் உள்ள 1,237 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. கட்சிரோலி சூப்பிரண்டு, நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி. அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 3 பறக்கும் படையினர், 3 கண்காணிப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story