மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் டிரைவர் கைது
மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் மணல் கடத்தல் அதிகஅளவில் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் வெள்ளவேடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த ஒரு மினிடெம்போவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மினிடெம்போ டிரைவர், சப்–இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கூடப்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சப்–இன்ஸ்பெக்டர் வினோத்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது.