கும்மிடிப்பூண்டியில் துணிகரம் 2 கடைகளில் ரூ.3 லட்சம் தாமிர வயர்கள், பணம் கொள்ளை


கும்மிடிப்பூண்டியில் துணிகரம் 2 கடைகளில் ரூ.3 லட்சம் தாமிர வயர்கள், பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 9:17 PM GMT)

கும்மிடிப்பூண்டியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர வயர்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ம.பொ.சி.நகரில் வசித்து வருபவர் மார்டீன் ஜோசப் (வயது 53). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் எலக்ட்ரிக்கல் ரீவைண்டீங் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க மார்டீன் ஜோசப் சென்றார். அப்போது கடையின் முன்பக்க இரும்பு ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அதில், அதிகாலை 3 மணியளவில் கடையின் இரும்பு ‌ஷட்டர் பூட்டை உடைத்து நீல நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் அணிந்த மர்மநபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த 9 பண்டல் தாமிர வயர்கள் உள்ளிட்ட சில பொருட்களை திருடிச்செல்வது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

மேலும் மர்ம நபர் கடையில் இருந்து திருடிய பொருட்களை மற்றொரு நபரின் உதவியுடன் ஆட்டோவில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அதேபோல கும்மிடிப்பூண்டி பஜாரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் ராமச்சந்திரன் (42). நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது கடையின் மாடியில் உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கடைக்குள் புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தை திருடிச்சென்றனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவான கம்ப்யூட்டர் ‘ஹார்ட் டிஸ்க்’கையும் அவர்கள் திருடிச்சென்றனர்.

ஒரே நாள் இரவில் கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருப்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகளை அமைத்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story