சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் தங்கம் கடத்தல்; பெண் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் தங்கம் கடத்தல்; பெண் கைது
x
தினத்தந்தி 20 March 2019 10:15 PM GMT (Updated: 20 March 2019 9:36 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு சென்னையை சேர்ந்த இப்ராகிம் (வயது 40), சாகுல் அமீது(39), மதுரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா(45) ஆகியோர் திரும்பி வந்தனர்.

சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது 3 பேரின் உடைமைகளில் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க உருளைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து 3 பேரிடம் இருந்தும், ரூ.61 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 878 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக பயணம் செய்த சென்னையை சேர்ந்த பார்கவி பாலசுப்பிரமணியம் (23) என்ற பெண் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 871 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் நடந்த சோதனையில் 4 பேரிடம் இருந்து ரூ.90 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 749 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த பார்கவி பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.


Next Story