ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ– மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் விலங்கியல் துறை 2–ம் ஆண்டு மற்றும் 3–ம் ஆண்டு படிக்கும் மாணவ–மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர். செய்முறை தேர்வு எழுத ரூ.2 ஆயிரத்து 80 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் கடந்த 18–ந் தேதி புகார் மனுவும் போட்டு உள்ளனர். இந்த நிலையில் கட்டண உயர்வை கண்டித்து, சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ–மாணவிகள் ஏராளமானோர் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவ–மாணவிகள் கூறியதாவது:–
நாங்கள் விலங்கியில் துறையில் இளங்களை 2–ம் ஆண்டு மற்றும் 3–ம் ஆண்டு படித்து வருகிறோம். எங்களுக்கு துணை பாடமாக வேதியியல் பாடம் உள்ளது. செய்முறை தேர்வு கட்டணம் எங்களுக்கு ரூ.120 மட்டுமே ஆகும். ஆனால் கட்டணத்தை உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 80 கட்டக்கோரி கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
நாங்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள். எனவே எங்களால் பணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். செய்முறை தேர்வு எழுதினால் மட்டுமே எங்களால் பட்டம் பெற முடியும். எனவே கட்டணத்தை குறைத்து, செய்முறை தேர்வு எழுத எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளும் இல்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.