நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 March 2019 4:45 AM IST (Updated: 22 March 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திரமோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் என்று முசிறியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து, முசிறியில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

‘நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தோடுதான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். 2-வது நாளாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் தொடங்கி இருக்கிறேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட டாக்டர் பாரிவேந்தரை நீங்கள் எல்லாம் வெற்றிபெற செய்ய வேண்டுமென இருகரம் கூப்பி ஆதரவு கேட்கிறேன்.

நாடு ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டு வாழ்க்கை கேள்விக்குறியாகவும், எதிர்காலம் மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது. நமது உரிமை பறிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாட்டு மக்கள் செய்த மிகப்பெரிய தவறே காரணம்.

மத்தியிலும், மாநிலத்திலும் தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். தவறான மனிதர்கள் என்ற வார்த்தை சரியா? தவறா? என பலமுறை யோசித்து ‘சரிதான்’ என்ற முடிவுக்கு வந்த பின்னரே இங்கு பதிவு செய்கிறேன். நரேந்திர மோடியோ, எடப்பாடி பழனிசாமியோ சரியான மனிதர்கள் அல்ல. மத்தியில் மோடி ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியாக இருந்தாலும் மக்களை பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் மக்களை காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களை காப்பாற்றி கொள்ளும் நிலையில்தான் உள்ளனர்.

குஜராத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது நடந்த படுகொலைகளை யாரும் மறக்க முடியாது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், மோடியை பதவி விலக அறிவுறுத்தினார். அப்போது, வேண்டாம் என சமாதானம் செய்தவர்தான் அத்வானி. அந்த அத்வானி இப்போது எங்கே என தேடிக்கொண்டிருக்கும் நிலை உள்ளது. மோடி, சுயநலத்திற்காக எதையும் செய்வார். எடப்பாடி பழனிசாமியை பற்றி சொல்லவே வேண்டாம். எனவேதான், இருவரையும் தவறான மனிதர்கள் என்றேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர். அவரை நீக்கி விட்டு சசிகலா முதல்-அமைச்சராக முயற்சித்த காலக்கட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைதண்டனை வழங்கி தீர்ப்பு வந்தது. அப்போது சசிகலா காலில் விழுந்து முதல்-அமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்று மோடியின் கைகளை கால்களாக நினைத்து கைப்பற்றி ஆட்சியை காப்பாற்றி வருகிறார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டு உள்ளனர். தற்போது நடவடிக்கை இருக்கிறதோ இல்லையோ, நாம் ஆட்சிக்கு வந்ததும் உரிய தண்டனை பெற்றே தீருவார்கள். பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி கொடூரம். ஜெயலலிதா இருந்தபோது அம்மா தி.மு.க.வாக இருந்த அ.தி.மு.க., தற்போது அடியாள் தி.மு.க.வாக மாறிவிட்டது. ஜெயலலிதாவின் பங்களா உள்ள கோடநாட்டில் காவலாளி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஏன்?, அங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அமைச்சர்கள் நடத்திய பேரம், கமிஷன், ஆதாரங்களை ஜெயலலிதா சேகரித்து வைத்திருந்தார். அதை வெளிவராமல் தடுக்கவே இந்த கொலைகள்.

கோடநாடு மர்மம் குறித்து எடப்பாடி வாய் திறக்காதது ஏன்?. ஏனென்றால் அந்த 5 கொலை குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளாகி உள்ளார். எனவே, இனியும் அவர் கோட்டையில் இருப்பது நியாயம் இல்லை. கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் உள்ளது.

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 100 பேர் உயிரிழந்தனர். வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால், 15 ரூபாய்கூட செலுத்தப்படவில்லை. பிரதமராக இருந்து இதுவரை 84 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கான செலவு ரூ.1,500 கோடி. அது யார் வீட்டு பணம்? நாட்டு மக்களின் வரிப்பணம். மோடி இந்திய பிரதமரா? அல்லது வெளிநாட்டு பிரதமரா? என்பதை சிந்திக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மன்மோகன் சிங், வி.பி.சிங், வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது, மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

மண்டல் கமிஷன் அறிக்கையில் நிறைவேற்றப்பட்டதை எடுத்துக்கூறி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தோம். மன்மோகன் சிங் ஆட்சியில் நம் தாய் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கருணாநிதி. சேலத்தில் ரெயில்வே கோட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் போன்ற பல திட்டங்களை கொண்டுவந்தது தி.மு.க. தான். எனவே, நம் கையில் மாநில அரசு. நாம் கை காட்டுவதே மத்திய அரசு. நாடு நலம்பெற வாக்களிப்பீர் உதயசூரியன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

Next Story