பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 7:47 PM GMT)

பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கீரனூர்,

கீரனூர் அடுத்துள்ள விசலிக்கோவில் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள், கீரனூர் கொங்காணி கருப்பர் கோவிலி லிருந்து காவடி, பால்குடம், அலகு குத்தி கொண்டு ஊர்வலமாக முருகன் கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் முருக பெருமானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடியில் சிற்றலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு புதுக்குடி கிராமமக்கள் செய்திருந்தனர்.

மணமேல்குடி உச்சயினி மாகாளியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மண்டகப்படிதாரர்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் மணமேல்குடி அய்யனார் கோவிலிலிருந்து பால் குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் ஆன்மிக சொற் பொழிவு, பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. திரு விழாவிற்கான ஏற்பாட்டை விஸ்வகர்மா சமூகத்தார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கீரமங்கலம் பர்மா காலனி பகுதியில் உள்ள முருகன் கோவில், சேந்தன்குடி ஜெயநகரம் கிராமத்தில் செயற்கை மலையின் மீது அமைந்துள்ள தென்பழனிமலை பாலசுப்பிரமணியர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக அறந்தாங்கி, பேராவூரணி, ஆலங்குடி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள பெரிய குதிரை சிலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காகித மாலைகளை காணிக்கையாக செலுத்தினர். குதிரை சிலை மறையும் அளவிற்கு மாலைகள் குவிந்தது. மேலும் கரும்பில் தொட்டில் கட்டுதல், காவடி, பால்குடம் எடுத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. கீரமங்கலம் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.

இதேபோல் புதுக்கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள செல்வவிநாயகர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உள்பட போலீஸ் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவரங்குளம் அருகே பூமத்தான்பட்டி வள்ளிதெய்வானை சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திரு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைபோல வேப்பங்குடி மலைமேல் முருகன் கோவில், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், தோப்புப்பட்டி முருகன் கோவில், மாதவத்தூர் பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி மலையாண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story