ஈரோட்டில் தனியார் நூல் மில்லில் பயங்கர தீ விபத்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோட்டில் உள்ள தனியார் நூல் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் சுப்பிரமணியகவுண்டன்வலசு பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். அங்கு தறிப்பட்டறைக்கு தேவையான நூல்கள் தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது. அந்த மில்லில் 12 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் இரவு பணியில் 6 பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு மில் வளாகத்தில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது மில்லின் உள்ளே இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைத்தொடர்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்குள்ள தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது.
இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த நூலில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக அவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மேலும், தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது.
சுமார் 3 மணிநேரம் போராடி தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மில்லில் இருந்த எந்திரங்கள், நூல் என சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.