கொள்முதல் செய்வதில் காலதாமதம்: திருக்குறுங்குடியில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை


கொள்முதல் செய்வதில் காலதாமதம்: திருக்குறுங்குடியில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 8:07 PM GMT)

திருக்குறுங்குடியில் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த 2 மாதங்களாக நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருக்குறுங்குடியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு டோக்கன் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இங்கு நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அந்த நெல் மூட்டைகள் சாலையோரங்களில் பாதுகாப்பின்றி குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் காத்து கிடக்க வேண்டியிருப்பதால், பெரிதும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். தங்கள் பண தேவைக்கு நெல் மூட்டைகளை சரியான நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர். எனவே கொள்முதல் நிலையத்தில் காலதாமதமின்றி விரைந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story