நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை: மைத்துனர் உள்பட 4 பேர் கைது
மதுரையில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மைத்துனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24) பட்டதாரியான இவர் கோவையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2017–ம் ஆண்டு சதீஷ்குமார் என்ஜினீயரிங் படித்து வந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதாவிற்கு அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் நடந்தது. தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையில் சதீஷ்குமாருக்கும், காதல் மனைவி அனிதாவுக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி போன் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார் அனிதாவை தன்னுடன் மீண்டும் அழைத்து வந்து விட்டார். இதையறிந்த அவரது பெற்றோர் சதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று, தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சதீஷ்குமார், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க இரு வீட்டினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்தனர். அதன்படி சதீஷ்குமாரும், அனிதாவின் உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு விசாரணை முடிந்து சதீஷ்குமார் மட்டும் தனியாக போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தெற்குமாரட் வீதியில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சதீஷ்குமாரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடுரோட்டில் சுற்றி வளைத்து அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சதீஷ்குமாரை அனிதாவின் அண்ணன் அரவிந்தன்(வயது 22) உள்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்து விட்டு கோவில்பட்டியில் மறைந்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள் விஜய்(21), ஆனந்த்(21), தனபாண்டி(21) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.