கள ஆய்வு செய்யாமல் பட்டா வழங்கினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கள ஆய்வு செய்யாமல் பட்டா வழங்கினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 March 2019 4:15 AM IST (Updated: 24 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

முறையாக விசாரிக்காமல், கள ஆய்வு செய்யாமல் பட்டா வழங்கினால் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சண்முகவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘அம்பாசமுத்திரத்தை அடுத்த மேலவாசலில் உள்ள ஒரு சொத்தை எனது சகோதரரின் மனைவி வசந்தி பெயருக்கு கடந்த 2007–ம் ஆண்டு கிரையம் செய்தோம். இந்த நிலத்துக்கு ரூ.10 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு அம்பாசமுத்திரம் தாசில்தார் பொறுப்பில் இருந்த துணை தாசில்தார் சந்திரன், கடந்த 2010–ம் ஆண்டு பட்டா வழங்கினார். பின்னர் தான் அது மோசடி பட்டா என்று தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் போலீசார், சந்திரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இதேபோல நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், ‘ராதாபுரம் வில்லூரில் கணபதி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை 2002–ம் ஆண்டு நானும், எனது சகோதரர் ரமேசும் கிரையம் செய்தோம். அதற்கு பட்டா கேட்டபோது, மோசடியான பட்டாவை ராதாபுரம் தாசில்தார் வழங்கியுள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு (நிலஅபகரிப்பு சிறப்பு பிரிவு) போலீசில் அளித்த புகாரின்பேரில் தாசில்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த 2 மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரர்களின் சொத்துகள் மீது உரிய விசாரணை நடத்தாமலும், கள ஆய்வு செய்யாமலும் அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தும், அதிகாரிகள் மீது துறை ரீதியிலான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மனுதாரார்கள் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களுக்கு இதுவரை பதில் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. மனுதாரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறைகளுக்காக ஒவ்வொருத்தரிடமும் ஓடுகிறார்கள். இதே பிரச்சினையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் சார்பில் உரிய நீதி கேட்டு நாள்தோறும் ஏராளமான வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை.

எனவே இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க நினைக்கிறேன். அதன்படி, தவறான பட்டா வழங்கியது குறித்து எத்தனை புகார்கள் நிலுவையில் உள்ளன என்று விவரங்களை சேகரிக்க வேண்டும். அதிகாரிகள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் பணியிடை நீக்கம் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கைகளை அவர்கள் மீது எடுக்க வேண்டும். பட்டா வழங்குவதில் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உரிய வழிகாட்டுதல்களுடன் சுற்றறிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல இந்த மனுதாரர்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது 6 வாரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை இந்த கோர்ட்டில் வருகிற ஜூலை 3–ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story