மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு: குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு 4 ஆண்டு சிறை மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை,
மதுரையில் கடந்த 2007–ம் ஆண்டு தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டது. இதில் அந்த அலுவலகத்திற்குள் இருந்த ஊழியர்கள் வினோத், கோபிநாத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் பலியானார்கள்.
இதுதொடர்பாக அட்டாக்பாண்டி மற்றும் அவருடைய கூட்டாளிகளை ஒத்தக்கடை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக அப்போதைய ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் (கூடுதல் டி.எஸ்.பி.யாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) என்பவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது. பின்னர், கடந்த 2009–ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, கடந்த 21–ந்தேதி நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு தலா 3 ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதாகவும், பலியான 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், ‘‘இந்த சம்பவம், நடந்தபோது, அங்கு இருந்தும் தடுத்து நிறுத்த தவறியதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், குற்றவாளி என கருதுகிறோம். அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து கருத்து கேட்க, 25–ந்தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இதையடுத்து அவர், நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று ஆஜரானார். அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் உங்களை குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்துள்ளது. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராஜாராம், ‘‘சம்பவ இடத்தில் நான் இல்லை. அங்கு நான் இருந்திருந்தால் நிச்சயம் தடுக்க முயற்சி செய்திருப்பேன். இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்கியுள்ளனர். இதுசம்பந்தமாக தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன்‘‘ என்றார்.
அதற்கு நீதிபதிகள், “தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க இயலாது. நீங்கள் கூற விரும்புவதை இங்கேயே தெரிவிக்கலாம்“ என்றனர்.
மேலும், ‘‘சம்பவ இடத்தில் நீங்கள் இருந்துள்ளீர்கள். ஆனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? அங்கு நீங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்பவ இடத்தில் உங்கள் குடும்பத்தினர் இருந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பீர்களா?“ என்றனர்.
‘‘எதிரிகளை கலையச்செய்வதற்காக உங்களிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கியாவது சுட்டு இருக்கலாமே?’’ என்றும் கேட்டனர்.
அதற்கு ராஜாராம், ‘‘என்னுடைய துப்பாக்கியை ஜீப்பில் வைத்திருந்தேன்’’ என்றார்.
‘‘துப்பாக்கியை பத்திரமாக வைத்துவிட்டு பணியில் இருந்துள்ளீர்கள்’’ என்று கூறிய நீதிபதிகள், ‘‘அரசு ஊழியராக இருந்தும், தனது கடமையை செய்ய தவறிவிட்டீர்கள். உங்களை இருந்த கோர்ட்டு குற்றவாளியாக கருதுகிறது. இதற்காக என்ன தண்டனை வழங்கலாம்’’ என்று கேள்வி எழுப்பினர்.
ராஜாராம், ‘‘எனக்கு 62 வயதாகிறது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறேன். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று முறையிட்டார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் குற்றவாளியாக கருதி, இந்திய தண்டனைச்சட்டம் 221–வது பிரிவின்படி (குற்றவாளிகளை உள்நோக்கத்துடன் தப்பிக்க விடுதல்) 4 ஆண்டு சிறை தண்டனையும், 217–வது பிரிவின்கீழ் (பொது ஊழியராக இருந்தும் சட்டத்திற்கு கீழ்படியாத நபர்களை காப்பாற்றுதல்) ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து ராஜாராம் நேற்று மாலையில் ஐகோர்ட்டில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
ராஜாராமை குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்தனர். இதை கேட்ட உடன், அவருக்கு திடீரென வியர்த்து கொட்டியது. கை கால்கள் நடுங்கின. இதை பார்த்த நீதிபதிகள், “கோர்ட்டின் பார்வையாளர்களுக்கான பகுதியில் சிறிது நேரம் அமர்ந்து இருங்கள். தண்டனை விவரத்தை பிறகு தெரிவிக்கிறோம்’’ என்றனர். அவரும் அங்கு சென்று அமர்ந்தார். அதன்பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து அவருக்கான தண்டனை விவரத்தை நீதிபதிகள் பிறப்பித்தனர்.