ஈரோடு அருகே வாலிபர் அடித்துக்கொலை தந்தை கைது


ஈரோடு அருகே வாலிபர் அடித்துக்கொலை தந்தை கைது
x
தினத்தந்தி 27 March 2019 5:00 AM IST (Updated: 27 March 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே, வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் டீக்கடை மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் சொக்கலிங்கம் (வயது 76). இவர் தனது வீடு, கடை உள்ளிட்டவற்றை தனது 2-வது மனைவி சகுந்தலாவின் மகன் கார்த்திக் (28) பெயரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எழுதி கொடுத்து விட்டார். கார்த்திக்குக்கு கவிப்பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திக் தினமும் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி தனது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு வீட்டை விட்டு வெளியே போ என்றும் கூறி வந்துள்ளார். இதை தடுக்க வந்த மனைவி கவிப்பிரியாவையும் அவர் திட்டி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் கார்த்திக் வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்து, தந்தையை வீட்டை விட்டு வெளியே போ என்றுக் கூறி சத்தம் போட்டுள்ளார். பின்னர் அவர் இரவு 11 மணியளவில் தூங்கச்சென்று விட்டார். இந்த நிலையில் சொக்கலிங்கம், மகன் தனது சொத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு தன்னை வெளியில் போகச் சொல்கிறானே என ஆத்திரம் அடைந்தார்.

உடனடியாக அவர் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த கார்த்திக்கின் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். இதில் கார்த்திக் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலையுண்ட கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சொக்கலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story