கோபி அருகே மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது மினி லாரி பறிமுதல்
கோபி அருகே மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
டி.என்.பாளையம்,
கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அடசப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து மர்ம நபர்கள் மணலை அள்ளி கடத்தி செல்வதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன. தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால் மணல் கடத்தலை தடுப்பதில் தொய்வு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் அடசப்பாளையம் பவானி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கோபி தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் கோபி தாசில்தார் விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் அங்கு ஒரு மினி லாரியில் மணலை அள்ளி போட்டுக்கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
உடனே அவர்களை அதிகாரிகள் சுற்றி வளைத்ததில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். பிடிபட்ட 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் கள்ளிப்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 45), அடசப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (45) என்பதும், அவர்கள் மினி லாரியில் மணலை கடத்த முயன்றதும்,’ தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலை கடத்த முயன்ற சரவணக்குமார், கனகராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.