போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது: பாகிஸ்தானை சேர்ந்தவர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்தவர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23–ந்தேதி சந்தேகப்படும்படியாக தங்கியிருந்த பாகிஸ்தான் கராச்சி பகுதியை சேர்ந்த முகமது யூனிஸ்(வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் பல்வேறு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும், போலி ஆதார் கார்டும் இருந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்துவதற்காக கள்ளத்தோணியில் இந்தியா வந்து இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. முகமது யூனிசை ஏர்வாடி போலீசார் கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதன் வழக்கு விசாரணைக்காக பாகிஸ்தான் முதியவர் ராமநாதபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி ராதாகிருஷ்ணன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9–ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது இறுதி விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.