தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்டும் திட்டம் உள்ளதா? அதிகாரிகள் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்டும் திட்டம் உள்ளதா என்று பதில் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
மதுரை,
தமிழகத்தில் உள்ள அணைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார உத்தரவிட வேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த 2017–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளை தூர்வாரக்கோரி குமரி மகாசபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், தலைமை பொறியாளர் பக்தவச்சலம் ஆகியோர் நேரில் ஆஜராகி, “தமிழகத்தில் உள்ள அணைகளை பல்வேறு கட்டங்களாக தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது“ என்றனர்.
“ஆறுகளை இணைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?“ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம். தற்போது தாமிரபரணி ஆற்றுடன், கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகியவற்றை இணைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்படும்.
அதேபோல காவிரி ஆற்றுடன் தெற்கு வெள்ளாற்றை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை காவிரி, வைகை, குண்டாற்றை இணைப்பதற்கான தொடக்க நிலை என்றும் கூறலாம். அடுத்ததாக, செய்யாறு, பெண்ணையாறு ஆகியவற்றை இணைப்பது தொடர்பாகவும், பெண்ணையாற்றுடன் பாலாற்றை இணைப்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகின்றன“ என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தமுருகன், “தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்டும் திட்டம் உள்ளதா என்று அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்“ என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஆறுகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், இதை நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது பற்றியும் விரிவான அறிக்கையை அடுத்த விசாரணையின்போது அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போதைய கோடை காலத்தை பயன்படுத்தி, அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்களை தூர்வாரி ஆழப்படுத்த உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் புதிதாக அணைகள் கட்டும் திட்டம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 10–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.