அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்: காங்கேயம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தர வேண்டும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்: காங்கேயம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தர வேண்டும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 28 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தர வேண்டும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

காங்கேயம்,

ஈரோடு நாடாளுமன்றத்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக காங்கேயம் நகர அ.தி.மு.க. செயலாளர் வெங்கு என்ற மணிமாறன் போட்டியிடுகிறார். இதைதொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டம் காங்கேயத்தில்–திருப்பூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே நடைபெற்றது. கூட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்த கொண்டு வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:–

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1991–ம் ஆண்டு இந்த தொகுதியில் நின்று வெற்றி வாகை சூடினார். அந்த அளவுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வெங்கு என்கிற மணிமாறன் காங்கேயம் நகராட்சியின் தலைவராக ஏற்கனவே பணியாற்றி உள்ளார். அப்போது அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த தேர்தலில் களப்பணி என்பது மிக முக்கியமானது. தொண்டர்கள் அனைவரும் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஈரோடு எம்.பி. எஸ்.செல்வகுமாரசின்னையன், காங்கேயம் எம்.எல்.ஏ. உ.தனியரசு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.என்.நடராஜ், செல்விமுருகேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காங்கேயம்–திருப்பூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. இதேபோல் வெள்ளகோவிலில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார்,மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுதர்சன்,வெள்ளகோவில்நகராட்சி முன்னாள் தலைவர் கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story