வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டா என்ற வினோத் (வயது 29). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான மோகன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைக்கு சென்று சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோத் தனது மோட்டார் சைக்கிளில் நந்தீஸ்வரர் கோவில் பின்புறமுள்ள சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செயயப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவே கொலை நடந்த பகுதியில் தனிப்படை போலீசார் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர்கள் 4 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் அவர்கள் 4 பேரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கொலை நடந்த சமயத்தில் அதில் பதிவாகியுள்ள நபர்களை பிடித்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.